“வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இன்று குழுவாக சந்தித்து, நடைபெறுகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழக முதல்வர் பேசி முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பின்னர், திமுக ஆட்சிக்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றம் அதில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக உள் இடஒதுக்கீடு கொடுக்கலாம். அதில் எந்த தவறும் கிடையாது. சரியான தரவுகள் வைத்து நியாயப்படுத்தி கொடுங்கள் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வழங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறது. அதன்பிறகு, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதியதாக உருவாக்கி, புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமித்தது. வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதற்கான பரிந்துரைகளை தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கொடுத்தது. ஆனால், 9 மாதங்கள் ஆகியும், ஆணையம் தமிழக அரசுக்கு இன்னும் எந்த பரிந்துரையையும் கொடுக்கவில்லை.
தரவுகளை சேகரித்து இடஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த தரவுகள் ஏற்கெனவே இருக்கின்றன. புதிதாக ஒன்றும் உருவாக்க வேண்டியது கிடையாது. இந்த தரவுகளை சேகரிப்பதற்கு அதிகபட்சம் 15 நாட்கள்தான் ஆகும். ஆனால், 9 மாதங்களாகியும் இன்னும் எங்களுக்கு தரவுகள் வரவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த இடைப்பட்டக் காலத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 6 கடிதங்கள் தமிழக முதல்வருக்கு எழுதினார். தொலைபேசி வழி பேசியுள்ளார். நாங்களும் சந்தித்துப் பேசினோம். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று இந்தக் கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.