பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்தால், திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மையில் கூறி இருந்தார். இன்று தமிழக சட்டப்பேரவையிலும் இதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
கோவை குண்டுவெடிப்பின் மூலம் எண்ணற்ற பொது மக்களை உயிரிழக்கச் செய்த, நூற்றுக்கணக்கானோரை படுகாயமுறச் செய்த, பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை சேதப்படுத்திய பயங்கரவாதிகளை குற்றவாளிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுவதுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்பவர்கள், மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளை, அடையாளம் காண்பது அந்த இஸ்லாமிய மதத்தையே அவமானப்படுத்தும் செயல். ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பது மனிதாபிமானமற்ற செயல். தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று சொன்னவர்கள், தீவிரவாதிகளை ‘முஸ்லிம் கைதிகள்’ என்று சொல்வது முரண் இல்லையா? மதவாத அரசியலை செய்து மக்களை பிளக்கும் இந்த இழி நிலை ஏன்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
