இஸ்ரேலில் பயங்கரவாதிகளால் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, வெற்றி கோப்பைகளை போன்று ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர் என ஜோ பைடன் வேதனையுடன் விவரித்து உள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் புகுந்து அந்த பகுதி மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்தபடி மக்களுக்கு உரையாற்றினார். அவரது இந்த உரையின்போது, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் உடனிருந்தனர். அப்போது பைடன் கூறியதாவது:-
இஸ்ரேலில் பெற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், குடும்பங்கள் அழிக்கப்பட்டன. அமைதியை கொண்டாட இசை திருவிழாவில் கலந்து கொண்ட இளைய சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டு, வெற்றி கோப்பைகளை போன்று ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர். அச்சத்தில் பதுங்கியிருந்த குடும்பத்தினர் பலர், குழந்தைகள் சத்தம் போட்டு அது பயங்கரவாதிகளின் கவனத்திற்கு சென்று விடாமல் இருக்க, பல மணிநேரம் வரை போராடினர். காயமடைந்த ஆயிரக்கணக்கானோர், உயிருடன் இருந்தபோதும், வெடிகுண்டு சிதறல்களால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளை சுமந்தபடி இருந்தனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கைகளில் சிக்கி இஸ்ரேல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
யூதர்களை கொல்ல வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். தீங்கு விளைவிப்பதற்கான முழுமையான செயலே இந்த தாக்குதல் ஆகும். இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 பேர் அமெரிக்கர்கள். இது பயங்கரவாதம். ஆனால், வருத்தத்திற்குரிய விசயம் என்னவெனில் யூத மக்களுக்கு இது புதிதல்ல. யூதர்களுக்கு எதிரான ஆயிரம் ஆண்டுகால பகைமைகளால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் வேதனை தரும் நினைவுகள் விட்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.