இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், துருக்கி அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடர்பான காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை டேக் செய்து துருக்கி கல்வித் துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், “உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் மிக கொடூரமாக இறப்பீர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பதிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன.
முன்னதாக, இஸ்ரேல் மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. போரை நாங்கள் விரும்பவில்லை. மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டுதனமான முறையில் அது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை என்றாலும் நாங்கள் அதனை முடித்து வைப்போம். எங்களைத் தாக்கியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஹமாஸ் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரியவைப்போம். இன்னும் பல தசாப்தங்களுக்கு ஹமாஸ்களும் இஸ்ரேலின் பிற எதிரிகளும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு சரியான விலையை நாங்கள் கொடுப்போம். குடும்பங்களை வீடுகளில் வைத்துக் கொன்றது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை படுகொலைச் செய்தது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கடத்துவது, குழந்தைகளை கட்டிப்போட்டு தூக்கிலிட்டு எரித்தது என அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனதை உலுக்குகிறது. ஹமாஸ்கள் காட்டுமிராண்டிகள். ஹமாஸ்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்றவர்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்க நாகரிக சமூகம் ஒன்றிணைந்தததைப் போல ஹமாஸ்களை ஒழிக்க நாகரிக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசினார்.
ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் செயல்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் சில மணி நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், “எரிபொருள் தீர்ந்து போனதால் சில மணிநேரங்களில் மின் உற்பத்தி நிலையம் முழுவதுமாக மூடப்பட்டு மின் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். மின் விநியோகம் சில பகுதிகளில் தடைப்பட்டிருப்பதால் காசா மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNRWA இந்த இறப்பு குறித்து எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகரில் இருந்து 1,87,500 பேர் வெளியேறி உள்ளனர். இவர்களில் 1,37,00 பேர் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காசா நகரில் 790 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகருக்கான குடிநீர், உணவு, மருந்து விநியோகம் தடைபட்டிருக்கிறது. இப்பகுதி மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகளை நடத்த முடியாது. எனவே சர்வதேச சமுகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “காசா நகருக்கு தேவையான அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீனத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு, போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளது. தீவிர போர் நடந்து வரும் காசா நகரில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சர்வதேச நாடுகள் தலையிட்டு, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.