ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்!

தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. இப்படி இருக்கையில் இந்த அளவுக்கு நீரை திறந்து விட முடியாது என்றும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் எனவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட என மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என தொடர்ச்சியாக போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்தின.

இப்படி இருக்கையில் மறுபுறம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணை நீரைக்கொண்டு 150-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கர்நாடகாவிலிருந்து நீர் திறந்து விடாதது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாது போன்ற காரணங்களால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,446 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று வெகுவாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் 30.35 அடியாகவும், நேற்று சற்று உயர்ந்து 31.30 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து 33.10 அடியாக இருக்கிறது. இருப்பினும் இது போதுமான அளவு கிடையாது.

இந்த சூழலில்தான் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீர் கோட்ட தலைமை பொறியாளர் எம்.சுப்பிரமணியன் மற்றும் மூன்று மாநில உறுப்பினர்களான தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர். அதேபோல இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாட்டின் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, தமிழக காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், கர்நாடகா நீர்வளத்துறை செயலர் ராகேஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர் மேட்டூர் அணையில் தற்போது 8 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது என்றும், கர்நாடகம் இதுவரை 47 டிஎம்சி அளவுக்குதான் நீரை திறந்து விட்டிருக்கிறது எனவும் வாதங்களை முன்வைத்தனர். தமிழகத்திற்கு கர்நாடகம் மொதம் 80 டிஎம்சிக்கு அதிகமாக தண்ணீரை கொடுக்க வேண்டும். அதற்கேற்றார் போல் கர்நாடகாவிடம் 56 டிம்எம்சி தண்ணீர் இருக்கிறது என்றும் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட ஒழுங்காற்றுக்குழு தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பரிந்துறைத்துள்ளது. இந்த பரிந்துரை நாளை நடைபெறும் காவிரி நீர் முலாண்மை ஆணைய கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும்.

இப்படி இருக்கையில் இந்த அளவுக்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும், இந்த பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் எனவும் கர்நாகட துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேலும், “கர்நாடகாவில் 200 தாலுகாக்கள் வறட்சியில் இருக்கின்றன. அதேபோல மின் உற்பத்திற்கும் அதிகமான தண்ணீர் தேவை. இப்போது நீர் வரத்து 8,000-9,000 கன அடியாக இருந்தாலும் தற்போது நாங்கள் தண்ணீரை திறந்து விட்டால் அது மாநில விவசாயிகளின் நலனை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.