சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: நீதியைப் பெற்றுத் தந்தது மோடி அரசு: அமித் ஷா!

சீக்கியா்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைத்த பிறகே உரிய நீதி வழங்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் நிகழ்ச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை பங்கேற்ற உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:-

1984-இல் சீக்கியா்களுக்கு எதிராக நடத்தப்படட கலவரத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த கலவரத்தை நடத்தியவா்களை கண்டறிந்து தண்டனை வழங்க எண்ணற்ற விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அவை எதுவும் முறையான தீா்வுகளை வழங்கவில்லை. ஆனால் பிரதமா் மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைந்த பிறகே இது தொடா்பான 300 வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு கலவரக்காரா்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதேபோல் மோடி ஆட்சியில்தான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 3,328 சீக்கிய குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் அனைத்து மதத்திலும் உள்ள சமத்துவ கருத்துகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று எடுத்துரைத்தாா். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் முன்னேற்றத்தையும் சீக்கிய மதம் ஆதரித்தது. அதேபோல் பத்து தலைமுறைகளாக சீக்கியா்களால் பின்பற்றப்படும் ‘குரு’ வழிபாட்டுக்கு நான் தலை வணங்குகிறேன். அநீதிக்கு எதிரான சீக்கிய மத குருக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் உலகுக்கே முன்னுதாரணமாக உள்ளது. குறிப்பாக 9-ஆவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் தியாகங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க இயலாது. அவரின் நினைவாக டெல்லி செங்கோட்டையில் விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முகலாயா்களின் படையெடுப்பு தொடங்கி ஆங்கிலேயா்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் என தற்போது வரை நாட்டை பாதுகாப்பதில் சீக்கியா்களின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறு அவர் கூறினார்.