சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பிலும். திமுக சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுகவில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகளும், பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். இந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.

சோனியா காந்தி 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தமிழ்நாடு வருகை தந்துள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் தமிழ்நாடு வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சந்தித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள், அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.