200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா

200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார்.

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் இலக்கியக்களச் செயலாளர் க.மணி வண்ணன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:-

மின்சாரம் வந்த காலம், காரல் மார்க்ஸ் தத்துவம் வந்த காலத்தில் வாழ்ந்தவர் வள்ளலார். அப்போது மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்ட வேண்டும் என்ற வள்ளலார் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தினார். 1860-ல் இந்து மதம் இல்லை. சைவம், வைணவம் ஆகிய சமயங்களில் இருந்தும் வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் இருந்தும் வெளியே வந்தால்தான் பேரின்ப இறைவனை அடைய வழி கிடைக்கும் என்றார் வள்ளலார்.

முன்னோர்களிடத்தில் பணம், நிலம் இருந்தது. ஆனால், கல்வி இல்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கியது வேதாந்தம், சித்தாந்தம். இதை வழிமொழிந்தது சைவம், வைணவம். வறுமை, அறியாமையை அகற்ற வேண்டும் என விரும்பியவர். கல்வி இல்லாததால் வறுமை வந்ததை வள்ளலார் உணர்ந்தார்.

‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’, எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு வந்தால் கடவுளை காண வழி உண்டு என்றார் வள்ளலார். சுத்த சமய சன்மார்க்க சங்கம் என்பது மதத்துக்காக அல்ல. இதில் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களும் சேரலாம். நான் எதிர்பார்ப்பது எல்லா உயிர்கள் மீதும் கருணை. இறைவன் மீது பற்று, பசியில்லா உலகம். பரஸ்பர நட்பு, ஜீவகாருண்யம் என்றார்.

பெரியாருக்கு முன்னரே வள்ளலார் வந்துவிட்டார். சாதி, மதம், ஆசாரம் ஆகியவற்றை ஒழிக்க எண்ணினார் வள்ளலார். காவியை விரட்ட நீலம் வந்தது, சிவப்பும், கருப்பும் வந்தது. நீலமும், சிவப்பும், கருப்பும் வெள்ளைக்கு கீழ் வந்தால் அரசியல் விளங்கும் என நான் நம்புகிறேன். வள்ளலார் கொடுத்த வெள்ளைக்கொடி தற்போது தேவை. எனவே இருநூறு ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் வள்ளலார் தேவைப்படுகிறார். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.