சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் தங்கை கனிமொழி. அவர் கர்ஜனை மொழியாக – கனல் மொழியாக இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கி வருவதைப் பார்க்கும்போது, கழகத் தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் நான் மிகுந்த பெருமை அடைந்து வருகிறேன். இந்த மகளிர் உரிமை மாநாட்டைத் தடையின்றி ஓடும் மாரத்தான் ஓட்டம் போல் அமைச்சர் மா.சு அவர்கள் துணை நின்று ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதுவரை ‘சென்னை சங்கமம்’ நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி, இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இதுதான் வித்தியாசம். இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி வருகை தந்துள்ளார். தனக்காக காத்திருந்த பிரதமர் பதவியை மறுத்து இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீரப் பெண்மணி என நின்றவர் அன்னை சோனியா காந்தி. அப்போது அன்னை சோனியா காந்தி அவர்கள்தான் ஆட்சிக்குத் தலைமை வகித்து பிரதமராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது வரலாறு.
கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்தபோது, அன்னை சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அவர், “கலைஞர் அவர்களின் மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையிலும் இழப்பாகும். என் மீது அவர் எப்போதுமே மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டிருந்ததை நான் எப்போதுமே மறக்க இயலாது. அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்” என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். அவரும் – இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தியும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே மொழி என்று ஒற்றை ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டமிடுகிறது. இந்திய மக்களின் நலனுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவைத் தோற்கடிப்பதே இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை, நாடாளுமன்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்ற நோக்கிலேயே பாஜக இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் இதைக் கொண்டு வந்திருந்தால் மோடியைப் பாராட்டி இருக்கலாம். பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கப்சா மசோதா.. இதன் காரணமாகவே இதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.. இப்படி மகளிர் இட ஒதுக்கீட்டைத் தடுக்க நினைக்கும் பாஜக 2024க்கு பிறகு ஆட்சியில் இருக்கப் போவதில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜகவின் சதியாகவே பார்க்க வேண்டும். சாதிவாரியான கணக்கெடுப்பு கேட்டால், மக்களைப் பிரிக்கப் பார்ப்பதாக மோடி கூறுகிறார். அனைத்து தரப்பினருக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கேட்கிறோம். ராகுல் காந்தி இப்போது சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.