பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
வேலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்துராமலிங்க தேவர் சொல்வது என்னவென்றால், நீ ஊமையாக இருக்கிற வரை உன்னை ஜனநாயகவாதி என்று சொல்வாங்க.. நீ உரிமை என்று பேசிவிட்டால் உன்னை தேசத்துரோகி என்று சொல்வாங்க.. என்றார்.. இந்த நிலம் அடிமைப்பட்டு கிடக்கும்போது இந்த நாட்டு விடுதலைக்கு நாங்க போராடியிருக்கிறோம்.. பாருங்க செக்கு இழுத்திருக்கோம்.. சிறை சென்றிருக்கோம்.. தூக்கில் தொங்கியிருக்கிறோம்.. நாடெங்கிலும் போராட்டம் நடந்தது. பாகிஸ்தான், வங்காளதேச இஸ்லாமிய மக்கள் கூட இங்கே வந்து மண்ணின் விடுதலைக்காக போராட்டம் செய்தார்கள்.. மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். பகத்சிங் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க முடியாது என்று தூக்கில் தொங்கினார். அது வீரமா.. சுபாஷ் சந்திரபோஷ் நாட்டின் விடுதலைக்கு ராணுவத்தை கூட்டி போராட்டம் நடத்தினார். இது வீரமா.. இல்லை ஆங்கிலேயருக்கு 2 முறை மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் செய்தது வீரமா.. இங்கே எல்லாம் கட்டமைக்கப்படுகிறது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார் காமராஜர். அவருடைய பேரன் தானே நாங்கள் எல்லாம்.
பண மதிப்பிழப்பு தவறு.. ஜிஎஸ்டி தவறு.. புதிய கல்விக்கொள்கை தவறு.. புதிய கல்வி கொள்கையில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் இருக்கு.. நிலையான அறம்.. மனுதர்மம்.. நீங்க என்ன பேசுகிறீர்களோ அதை தான் எங்க குழந்தைக்கு சொல்கிறீர்கள்.. பெண்ணிய விடுதலையில் ஹிஜாப் அணிய கூடாது என வருகிறது. உங்களுக்கு ஒரு மத நம்பிக்கை இருக்கிறது அல்லவா.. பூநூல் அணியாமல் இருக்க முடியுமா.. பள்ளி, கல்லூரி செல்லும்போது பூநூல் அணியாமல் போக முடியுமா?.. ஜிஎஸ்டியால் இதுவரை என்ன நடந்தது. சரக்கு மற்றும் சேவை வரியால் இந்த நாடு வளர்ந்தது எவ்வளவு?… நாட்டின் நிதி அமைச்சரிடம் ஜிஎஸ்எடி வரியால் இவ்வளவு நிதி வந்துள்ளது என்று சொல்ல முடியுமா.. உப்புக்கு வரி, இட்லிக்கு வரி, சட்டைக்கு வரி.. இப்படியே எதுக்கு எல்லாம் வரி.. ஒரு மாட்டிடம் பால் கறக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொடுக்க வேண்டும், தவுடு வைக்கவேண்டும், புண்ணாக்கு வைக்க வேண்டும்.. வைக்கோல் போட வேண்டும்.. ஒன்னும் போடாமால் பாலை மட்டும் கறந்துகொண்டே இருந்தால் என்ன செய்யும்.. மாடு செத்து போகும்.. அப்படித்தான் நீங்க இங்க பண்றீங்க..
பணம் செல்லாது என்று சொல்லும் போது மோடி சொன்னது ஞாபகம் இருக்கிறதா?.. ஊழல் லஞ்சம் ஒழியும் என்றார்களே.. தீவிரவாதம் ஒழியும் என்றாரே.. ஆனால் அதுக்கப்புறம் தானே புல்வாமா தாக்குதல் நடந்தது. பிறகு ஏன் அமலாக்கத்துறை ரைடு வருகிறது. ஓட்டுக்கு ஆயிரம் ஆயிரமாக காசு கொடுப்பதெல்லாம் எங்க இருந்து வருகிறது. பணமதிப்பிழப்பால் மக்கள் எவ்வளவு அல்லல் பட்டார்கள்.. அதற்கு வருத்தம் தெரிவித்தீர்களா?
தேர்தல் வரும்போது தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு இந்த சோதனையை நடத்தி இருக்கலாம். 4 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. அதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வாங்கித்தர முடியவில்லை. எப்படி மீண்டும் வந்து தமிழகத்தில் ஓட்டு கேட்பீர்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு செங்கல்லை வைத்து விட்டு போய் விட்டார்கள். நாங்கள் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குபெறும்போது பிற கட்சியினர் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள்.
நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் ஜெயிலர் படத்திற்கு ஏன் நெருக்கடி இல்லை. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களுக்கு இதுபோன்ற நெருக்கடி இல்லை. இதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சினிமாத்துறை என்பது தற்பொழுது கார்ப்பரேட் கையில் அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.