சென்னை சுங்கத்துறை தேர்வில் நூதன முறைகேடு: சிக்கிய 30 வடமாநிலத்தவர்!

சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படுவது இல்லை என்ற புகார் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பல விளக்கங்கள் கூறப்படுகிறது. குறிப்பாகத் தமிழக இளைஞர்கள் போதியளவில் விண்ணப்பித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் வட மாநில இளைஞர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சுங்கத்துறையில் கிளார்க், கேண்டீன் அட்டெண்ட், கார் டிரைவர் என 17 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 10வது/ 12வது கல்வித்தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தகுதி பெறும் நபர்களுக்கு 30,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சென்னையிலேயே பணியாற்றலாம் என்பதால் இதற்குப் பலரும் விண்ணப்பித்தனர். 17 காலியிடங்களுக்கான இந்த அறிவிப்பிற்கு மொத்தம் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அதில் இருந்து மொத்தம் 1600 பேர் எழுத்துத் தேர்வுக்குத் தேர்வாகினர். அதன்படி நேற்றைய தினம் சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கே இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர் காதில் ஏதோ சின்ன கருவி இருந்த நிலையில், அதை எடுத்துள்ளனர். அதன் பின்னரே அவர் புளூ டூத் மூலம் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த அவர், காதில் சிறிய அளவிலான புளூ டூத் கருவியை வைத்துள்ளார். மேலும், அவர் வயிற்றில் சிம்கார்டு கொண்ட கருவியைச் சேர்த்து ஒட்டியுள்ளார். இந்த ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து அவர் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அதாவது அந்தத் தேர்வில் கலந்து கொண்ட ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்கள் இதே போல புளூ டூத் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அத்தனை பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். ஒரே நேரத்தில் இத்தனை பேரைப் பிடித்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்த புளூ டூத் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவற்றைக் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் முதற்கட்ட விசாரணையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 26 நபர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவர் உத்தரப்பிரதேசத்தையும், இருவர் மற்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தித் தேர்வில் புளூ டூத் மூலமாக பிட் அடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுக்கு வெளியே இருந்து உதவியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள் சுங்கத்துறை ஊழியர்கள் மூலமாகக் கசிந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது அவர்கள் கூறுகையில், “ரெயிலில் வந்த போது அரியானாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் மோசடியை அரங்கேற்றினோம்” என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இனி அவர்கள் எந்தவித அரசு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியாது.