காசா முனையில் இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசிய நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்து பேசினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே காசாவுக்கு வெளியே இஸ்ரேல் அமைத்துள்ள ராணுவ தளத்திற்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென சென்றார். அங்குள்ள ராணுவ ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடனும் உரையாடினார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அங்குள்ள இஸ்ரேல் வீரர்கள் மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடுகிறார். அப்போது அவர், “அடுத்த கட்டத்திற்கு ரெடியா.. அடுத்த கட்டம் சீக்கிரம் வந்துவிடும். எல்லாரும் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார். அதற்கு அவரை சுற்றி இருந்த இஸ்ரேல் வீரர்கள் ஆம் ரெடி என்பது போலத் தலையசைக்கிறார்கள். இருப்பினும், அடுத்து இஸ்ரேலின் திட்டம் என்ன என்பது குறித்து அவர் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே வடக்கு காசா பகுதியில் இருக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டது. பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு முக்கிய வழிகளில் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் அப்போது தாக்குதலை நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து வந்துள்ள இந்த மெசேஜ் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதலை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே காசா எல்லைக்கு மிக அருகே இஸ்ரேல் புதிய ராணுவ தளங்களை அமைத்து, அப்படி அமைக்கப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு ரான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று இதைக் கூறியிருந்தார். மேலும், இஸ்ரேல் அங்கே பீரங்கிகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த கட்டமாகக் காசா நகருக்கு இஸ்ரேல் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம். அப்படிப் படையெடுத்தால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும்.