சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசினார்.
சென்னையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மகளிர் உரிமை மாநாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். அதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
32 ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்க்கையின் இருள்சூழ்ந்த அந்த நாளில் முதன்முதலாக தமிழ்நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். சிதறிய எனது தந்தையின் உடல் பாகங்களை பெற்று கொள்வதற்காகவே அந்த சமயத்தில் இங்கு வந்தேன். அந்த சமயத்தில் எனது இதயமே நொறுங்கி போனது போன்று உணர்ந்தேன். அப்போது எனக்கு வயது 19. தற்போதைய எனது வயதை விட குறைந்த வயதில் எனது தாயார் இருந்தார். அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் நானும், எனது தாயாரும் இறங்கிய போது விமான நிலையத்தில் பணியில் இருந்த பெண்கள் எங்களை சூழ்ந்து கொண்டு எனது தாயாரை பார்த்து கதறி அழுதனர். அப்போதுதான் தமிழ்நாட்டு பெண்களின் உணர்வுகளை உண்மையாகவே அறிந்து கொண்டேன். நீங்கள்தான் என் தாய், என் சகோதரி உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
100 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை எழுதினார். தமிழகத்தில் மகளிர் முன்னேற்றத்துக்கு அடிக்கல் நாட்டியவர் தந்தை பெரியார். சமூக மாற்றத்துக்கான புரட்சி இங்கே தான் உருவானது. 100 ஆண்டுகளுக்கு பின்பும் இப்போதும் பெண் ஏன் அடிமையாய் இருக்கிறாள் என கேட்கும் நிலைதான் உள்ளது. இன்னும் சமத்துவத்தை பெண்கள் பெற முடியாத நிலை இருக்கிறது. முழுமையான சமத்துவத்தை பெற பெண்கள் இன்னும் அதிகமாக உழைத்தாக வேண்டும். மாற்றத்துக்கான சரியான தளத்தில் இப்போது நாம் எல்லோரும் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்.
பெண்கள்தான் இந்த நாட்டின் தூண்கள். இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், இந்த நாட்டில் பெண்கள் பல துயரங்களை சந்தித்து வருகிறோம். எந்த பிரச்சினையென்றாலும் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். மகளிர் முன்னேற்றத்துக்கு அடிக்கல் நாட்டியவர் தந்தை பெரியார் என்றால் அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோர் அதை முன்னெடுத்து சென்றார்கள். இதன்காரணமாகவே இந்தியாவிலே தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் சிறந்த இடத்தில் உள்ளது. ஆனாலும், பெண் ஏன் அடிமையாக இருக்கிறாள் என்ற பெரியாரின் கேள்வி தற்போது வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இதை உடைத்தெறிய நாம் ஒவ்வொருவரும் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்ட வேண்டும். இதன்மூலம் இன்னும் உயர்ந்த நிலைக்கு பெண்கள் வரமுடியும்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து இப்போது நாம் அதிகமாக பேசி வருகிறோம். எதிர்கால இந்தியாவை வளமாக்க பெண்கள் முன்னேற்றத்தால் மட்டுமே முடியும் என்பதை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்ளன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற போராடினோம். இனிமேலும் காலத்தை வீணடிக்க முடியாது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பாதி பெண்கள் உள்ளனர். எனவே, சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.