குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர், புரோக்கர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு பெண் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சி.தினேஷ் (29). இவருக்கு நாகதேவி என்ற மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தினேஷை திருச்செங்கோடு சானார்பாளையத்தைச் சேர்ந்த லோகாம்பாள் (38) என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பின், தினேஷை நேரில் வரவழைத்த லோகாம்பாள், தினேஷுக்கு 3-ஆவதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்யும்படி கூறியுள்ளார். அதற்காக ரூ.2 லட்சம் வரை பேரம் பேசியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தினேஷ் சம்பவம் தொடர்பாக திருசெங்கோடு காவல் நிலையத்தில் கடந்த 12-ம் தேதி புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் லோகாம்பாள் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, லோகாம்பாளை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏழ்மையில் உள்ள பெற்றோரை அணுகி அவர்களது குழந்தைகளை பேரம் பேசி விற்பனை செய்தது தெரியவந்தது.
தவிர, இவரது பின்னணியில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராாத என்பவர் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெண் மருத்துவர் அனுராதா மற்றும் லோகாம்பாள் ஆகிய இருவரையும் திருச்செங்கோடு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, பெண் மருத்துவர் அனுராதா, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கர்களுக்கும் என்ன தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பெண் மருத்துவர் அனுராதா மீது எடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதனிடையே, குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்மன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையில் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு பெண் மருத்துவர் ஒருவர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.