காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திற்கு, நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என என்எல்சி இந்தியா நிறுவனத்தை வலியுறுத்தி இரண்டாவது அனல் மின் நிலையம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க மாநிலப் பொதுச் செயலர் அ.பெ.ரவிந்திரன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைவர் காளிமுத்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சுந்தர் விமல்நாதன், தஞ்சாவூர் தங்கமுத்து, நாகப்பட்டினம் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், இரண்டாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் 140 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.