பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியும்: எச்.ராஜா

“ஜெய் ஶ்ரீராம்” கோஷம் ஆட்சேபகரமானதல்ல என பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, ஜெய் ஶ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் இந்த ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் ஜெய் ஶ்ரீராம் முழக்கம் குறித்து விமர்சனங்கள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

பாரதநாட்டின் அரசயலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் “ஶ்ரீராமரின்” படம் உள்ளது. இன்றும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக உள்ளது. ஆகவே “ஜெய் ஶ்ரீராம்” கோஷம் ஆட்சேபகரமானதல்ல. மரியாதா புருஷோத்தமன் ஶ்ரீராமர் நம்நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம். பல மனைவிகளோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்? இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.