எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் 52ஆவது ஆண்டு தொடக்கவிழா கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திலும் கொடியேற்றி, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினோம்.
இரண்டரை ஆண்டுகாலமாக திமுக அரசு எந்த திட்டத்தையும் கோவை மாவட்டத்திற்கு தரவில்லை. 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பல்வேறு திட்டங்களை கொடுத்தது. கோவை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட சாலை தரமற்றதாக உள்ளது. இந்த ஆட்சி வந்த உடனே கோவைக்கு போட விருந்த 500 சாலை பணிகளை ரத்து செய்தார்கள். சிறுகுறுதொழில் முனைவோர்கள், அரசு ஊழியர்கள் போராடி வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள் என கூறினார்.
பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று உங்களை சொல்கிறார்களே? என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், எப்படியாவது எதையாவது ஒன்றை செய்து குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக திமுகவின் ஐ.டி.விங், சில பத்திரிக்கையாளர்களும் இதை பற்றி பேசுகிறார்கள். ஏக் நாத் ஷிண்டே என்பவர் கட்சிக்கு எப்படிப்பார்த்தாலும் துரோகம் செய்த மனிதர். 1972ஆம் ஆண்டில் கட்சி தொடங்கப்பட்டு எனது தந்தையார் காலத்தில் இருந்து இந்த கட்சி குடும்பத்தில் இருந்து வந்தவன். எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும். நிச்சயமாக 40 தொகுதிகளிலும் வெல்வோம்.
கோவை மாவட்டத்தில் முழுமையாக 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வென்றதால் திமுகவுக்கு என் மீது கோபம் உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம் என எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார். சிலுமிஷங்கள் மூலம் எங்களை பிரிப்பது எல்லாம் எடப்பாடியாரிடம் நடக்காது. துரோகங்கள், எதிரிகளை முறியடித்து எடப்பாடியார் வந்துள்ளார். எங்களுக்குள் என்னை மட்டுமல்ல யாரையும் பிரிக்க முடியாது என்று கூறினார்.