கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு மூன்று மாதம் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாஷாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 29 ஆண்டுகளாக தமது தந்தை சிறையில் உள்ளதாகவும், குண்டு வெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட குறைவான தண்டனையை தனது தந்தை அனுபவித்துவிட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவித்து வருவதாக கூறியுள்ளார். எனவே தனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமெனவும், வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, இடைக்கால ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என கூறினார். இதனையடுத்து, பாஷாவிற்கு மூன்று மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன் நீதிபதிகள், வழக்கு குறித்து அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.