பொதுப்பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

அடுக்குமாடி மற்றும் தனிக்குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் களஆய்வு ஆலோசனை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நலத்திட்டங்களின் செயலாக்கம் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

அரசின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு பெரும் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம். உத்தேச பணி முடியும் நாட்களுக்குள் குறிப்பிட்ட பணிகள் முடிவடையாத போது திட்டத்திற்கான செலவு அதிகரிப்பதோடு நிறைவேறாத பணிகளால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே கால தாமதம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடைய வேண்டும் என்பதை போல நலத்திட்டங்களும் முழுமையாக விளிம்பு நிலை மக்களையும் பழங்குடியின மக்களையும் விரைவில் சென்றடைய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எனவே அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக அரசின் இலக்கு, மக்களின் குடும்பங்களை மேம்படுத்துவது, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பயன்பெறுவதை உறுதி செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடன் உதவி பெற வழிவகை செய்வது போன்றவைகள் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை வளம் பெற ஆட்சியர்களாகிய நீங்கள் உதவ முடியும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெறுவது பள்ளி கல்லூரி அளவிலும் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் அவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதையும் அவர்கள் வசிக்கும் அரசு மாணவர்கள் விடுதிகள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்வதையும் உங்கள் முக்கிய பணிகளில் ஒன்றாக நீங்கள் கருத வேண்டும்.

இந்த நல்ல தருணத்தில் நான் இரு முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். தென் சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவியேற்றவுடன் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி சுங்கச் சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தார்கள். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதனால் சாலையின் பலப்பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இதே சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று நாளை முதல் நாவலூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரம், மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அண்மையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண முறையை மாற்றியமைத்த போது இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ 8 க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது. இந்த குடியிருப்புகளில் வசிக்கக் கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக இருக்கிறது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இதை பரிசீலித்து 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டிற்கான புதிய சலுகை கட்டண முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ் பொது பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலங்கள் எங்கும் வசிக்கும் சிறு குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள். மக்களுக்கான இந்த அரசு அவர்களை நோக்கி செல்லும் இந்த முயற்சிதான் இந்த கள ஆய்வில் முதலமைச்சர் ஆய்வு கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.