ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புகிறது: ரிஷி சுனக்

ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அவர், இங்கிலாந்தின் முழுமையான ஆதரவு இஸ்ரேலுக்கு இருப்பதை நேரில் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரிஷி சுனக், “இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் நான் இங்கு இருப்பதற்கு வருந்துகிறேன். கடந்த இரண்டு வாரங்களில் எந்த நாடும், எந்த மக்களும் சகித்துக்கொள்ளக் கூடாத கொடூர தாக்குதலை இந்த நாடு சந்தித்துள்ளது. தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இங்கிலாந்து மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேலின் உரிமையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தன்னை தற்காத்துக் கொள்ள, ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்க இஸ்ரேலுக்கு எங்கள் ஆதரவு உண்டு. பாலஸ்தீன மக்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதாபிமான உதவிக்காக காசாவுக்கான பாதைகள் திறக்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் எடுத்த நேற்றைய முடிவை நான் வரவேற்கிறேன். நீங்கள் அந்த முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அரபு நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொண்ட அமைதி நடவடிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

முன்னதாக இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பின்போது பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். ‘ஹமாஸின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களாகப் பாலஸ்தீன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை நாம், தொடர்ந்து அளிப்பது முக்கியமானது’ எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.