மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் ஏமாற்றும் செயல்: டிடிவி. தினகரன்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல். பொதுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வருவதே, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வாக அமையும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்பட்ட மின்கட்டண சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு புதிய மின் கட்டண உயர்வின் படி யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதால் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் மின் தூக்கி வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தும் போது பன்மடங்கு உயர்த்திவிட்டு குறைக்கும் போது மட்டும் சொற்ப அளவிலேயே குறைப்பதா என அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் முதலமைச்சரை நோக்கி கேள்விகள் எழுப்புவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் பாதிப்பைச் சந்தித்து வரும் பொதுமக்களை மீண்டும் ஏமாற்றாமல், புதிய மின் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இருந்த நடைமுறையைக் கொண்டு வருவதே தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்திகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.