காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள், அதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 7-ம் தேதி தொடங்கிய காசா – இஸ்ரேல் மோதல், தற்போது 12-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம்தான் இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ள நிலையில், அவர் பொய் சொல்கிறார் என்று ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அவர் ஒரு பொய்யர். மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு இருப்பதாகக் கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக இஸ்ரேல் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அதன் நகல் எங்களிடம் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம். பொய்க் கதைகளை அவர்கள் புனைவதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.