பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சல்யூட் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணும் இடமெங்கும் செவ்வாடையாக காட்சி அளிக்கிறது. வழக்கமாகவே ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தினசரியும் பக்தர்கள் வந்தாலும் இன்றைய தினம் குவிந்திருப்பது பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத்தான். 82 வயதான பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் வழிகாட்டியாக இருந்த நம்பிக்கையாக இருந்த ஆன்மீக குரு அம்மா மறைந்து விட்டார் என்று லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை நேரில் வந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். அப்போது ஆளுநர் ரவி சல்யூட் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி மலர்வளையம் வைத்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, த.மோ.அன்பரசன் ஆகியோரும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

இந்து மதத்திலே ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர்தான் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி எல்லோருக்கு பொது என்ற நிலையை உருவாக்கி, அக்காலத்தில் இருந்தே, அனைத்து சாதியினரும் இங்கு வருவதற்கு வாய்ப்பு அளித்தவர் அவர் ஒருவர்தான். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி கூறியதை எல்லாம் நிறைவேற்றிக் காட்டியவர் பங்காரு அடிகளார். அவர் செய்த சாதனைகள் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்று. அந்தக் காலத்திலேயே பெண்களை கருவறைக்குள் அனுமதித்து, அவர்களே அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்தவர். அவரது சாதனைகள் எண்ணிலடங்காதது. மதம், கட்சி, சாதி, என வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உணர்வோடு பாடுபட்டவர். நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார். அவரது பிள்ளைகள், பங்காரு அடிகளாரின் கருத்துகளை எடுத்துச் சென்று பரப்ப எப்போதும் தயாராக இருப்பவர்கள். அனைத்து தரப்பினரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இங்கே மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், அதில் இலவசமாக மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அவரது மறைவு அனைவருக்குமே பெரிய இழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.