ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அந்த உரையில் அவர் கூறியுள்ளதாவது:-
ஹமாஸ் மற்றும் புதினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை. ஆனால் இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும். ஆகையால் இந்தச் சூழலில் இத்தகையப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். அதற்காக நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதைப் புரியவைப்பேன்.
இது புத்திசாலித்தனமான முதலீடு. இந்த முதலீடுகளால் பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் பலன் பெறுவர். அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதால் கிடைக்கும் பலன் அது. அமெரிக்கத் தலைமைதான் இந்த உலகை ஒன்றிணைத்து வைத்துள்ளது. நமது நட்புறவுகள் தான் நமக்கான பாதுகாப்பு. நம் தேசத்தின் மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு பல நாடுகள் நம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் சென்றுவந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்காக இவ்வாறாக உரையாற்றியுள்ளார். பைடனின் திடீர் உரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் அவர் தனது உரையில், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்கர்களை பாதுகாப்பாக மீட்பதே முதல் கடமை என்றார். ஹமாஸ் தீவிரவாதிகள் வசம் 203 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய மக்கள் ஸ்திரமாக, உறுதியாக, மீண்டெழும் துணிவோடு இருக்கின்றனர். அதேவேளையில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலால் வேதனையுடன் உள்ளனர். அதிர்ச்சியும், ஆத்திரமும் அவர்களிடம் மேலோங்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விவரித்துள்ளார்.