பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும், பக்தர்களால் ‘அம்மா’ என அன்போடு அழைக்கப்பட்டவருமான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகெங்கும் இருக்கும் ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.
கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பங்காரு அடிகளாரின் உடலுக்கு தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார். தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் அடிகளார். இங்குதான் அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.