போரினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காசாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக இன்று சனிக்கிழமை காசாவுக்கு சென்றன என்று செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் தொங்கி 15 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் காசா மக்களுக்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்காக எகிப்து – காசா எல்லை இன்று சனிக்கிழமை திறக்கப்பட்டன. சுமார் 3000 டன் உதவி பொருட்களை ஏற்றப்பட்டிருந்த 200-க்கும் அதிகமான லாரிகள் காசாவுக்குள் நுழைவதற்கு முன்பாக ரஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வருகிறது. அக்.7 தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனயர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் நாள் தாக்குதில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200க்கும் அதிமானவர்களை பிணையக் கைதியாக பிடித்துச் சென்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து காசா நகரை முற்றுகையிடப் போவதாக இஸ்ரேல் அறிவித்தது. நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தடைப்பட்டது. இது ஒரு நிரந்தரமான பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, தங்களால் கட்டுப்பட்டின் கீழ் இல்லாத எகிப்தின் ராஃபா பகுதி வழியாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. காசாவுக்கு செல்ல எகிப்தின் ராஃபா மட்டுமே ஒரு வழி என்பது குறிப்பிடத்தக்கது.
காசா வாசிகளுக்கான மனிதாபிமான உதவிகள் விமானம் மூலமாக எகிப்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவை லாரிகளில் ஏற்றப்பட்டு ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அவை காசாவுக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஐ.நா.வின் பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்து பெறப்பட்ட மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு கொண்டு செல்ல பொறுப்பேற்றிருக்கும் எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சொந்தமான 20 லாரிகளில் உதவிப் பொருட்கள் காசா எல்லைக்குள் நுழைந்திருப்பதாக சர்வதேச ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்தேரஸ் ராஃபா எல்லைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களைப் பார்வையிட நேற்று வெள்ளிக்கிழமை எகிப்து சென்றார். அப்போது அவர். “இவை வெறும் லாரிகள் அல்ல.. இவை உயிர் நாடிகள்.” என்று வேதனை தெரிவித்தார்.
இந்தநிலையில், வளர்ந்து வரும் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர். என்றாலும் இந்த நிலைமையின் முக்கிய சூத்திரதாரிகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாட்டுத் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளன.