“சனாதனம் என்றால் இந்து மதம். அப்படிப்பட்ட சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று அரைவேக்காடு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதிலும், இதனை நாடகம் என்றே திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கிண்டல் அடித்து வருகின்றன. இதன் காரணமாக, அதிமுக பக்கம் செல்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், அமைப்புகளும் தயங்கி வருகின்றன. இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, அண்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். அதாவது, பாஜகவுடன் அதிமுக இனி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்பதை மக்களுக்கு நன்கு புரிய வைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திண்டுக்கல் சீனிவாசன் நேற்று முன்தினம் பேசுகையில், “பாஜக என்ற சைத்தானிடம் இருந்து நாங்கள் விலகி விட்டோம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியாதவது:-
பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, எம்ஜிஆரின் தயவால், எம்ஜிஆர் போட்ட பிச்சையால் முதலமைச்சர் ஆனவர் தான் கருணாநிதி. இந்த தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபம் திமுக. கிட்டத்தட்ட 53 ஆண்டுகாலமாக ஒரே குடும்பம் தான் திமுகவை நிர்வகித்து வருகிறது. கருணாநிதி முதலமைச்சர்.. திமுகவின் தலைவர். இன்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சர்.. திமுகவின் தலைவர். நாளைக்கு உதயநிதி. திமுக காரன் ஒருத்தனுக்கு கூடவா மானம் ரோஷம் இல்லை. ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் முதலமைச்சராக முடியாதா? துரைமுருகனுக்கு அந்த தகுதி இல்லையா? கேஎன் நேருவுக்கு இல்லையா?
நேற்றைக்கு கட்சிக்கு வந்தவர் உதயநிதி. உதயநிதிக்கு என்ன வயது? என்ன கட்சிப் பணிகளை அவர் செய்திருக்கிறார்? திமுகவின் சரித்திரம் அவருக்கு தெரியுமா? நடிகைகளை பற்றி கேட்டால் அவருக்கு தெரியும். திமுகவின் சரித்திரம் அவருக்கு எங்கே தெரியப்போகிறது. முதலில் ஸ்டாலினுக்கு தெரிந்தால்தானே, உதயநிதிக்கு தெரிவதற்கு. இன்றைக்கு அந்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி.
நேற்றைக்கு முளைத்த காளானான அரைவேக்காடு உதயநிதி, சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார். சனாதனம் என்றால் இந்து மதம். இந்த நாட்டிலேயே யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற உரிமை உண்டு. அதில் தலையிடுவதற்கு நீ இல்லை.. உங்க அப்பா இல்லை..யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார்.