நீட் பிஜி தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலும் மருத்துவப்படிபில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கோழி முட்டையை காண்பித்து நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்தார்.
நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனது முதல் கையெழுத்தை போட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
எனக்கு மருத்துவம் பார்த்த யாரும் நீட் தேர்வு எழுதவில்லை. இருந்தாலும் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையாலும், அவர்கள் கொடுத்த மாத்திரையினாலும் தான் இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். கடந்த ஆகஸ்டு மாதம் நீட் தேர்வுக்கு எதிராக நாம் எப்படி உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டோமா, அதே போல் இன்று இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக நாம் கடந்த 5 ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக நாம் மக்கள் மன்றத்தில் போராடினோம். ஆட்சிக்கு வந்த போது சட்டமன்றத்திலே செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும், கடமைகளையும் தொடந்து உண்மையாக கொண்டுவந்துள்ளோம். நீட் விலக்கு மசோதாவை செப்டம்பர் 2021-ல் நிறைவேற்றினோம். அதனை ஆளுநர் ரவி அவர்கள் திருப்பி அனுப்பினார். மறுபடியும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். இப்போது இந்த மசோதா 21 மாதங்களாக குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
நீட் தேர்வினால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கையெழுத்து இயக்கத்தை கொண்டு வந்துள்ளோம். நீட் தேர்வு வந்தால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார்கள்.. மெடிக்கல் காலேஜில் பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள்.. ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது. பிஜி நீட் தேர்வில் எத்தனை பெர்சன்டைல் எடுக்க வேண்டும் என்று தெரியுமா? ( என்று கூறி முட்டையை எடுத்து காண்பித்தார்). இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். இது நம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் புரட்சி ஒட்டுமொத்தமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவினரும் வாருங்கள் ஒன்றாக போராடுவோம். அந்த கிரெடிட்டை நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். அதிமுகவினருக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். கடந்த காலங்களில் தமிழ்நாடு கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லிக்கு சென்று எப்படி கோரிக்கை வைத்தோமோ அதேபோல் நீட் விலக்கிற்காக அனைவரும் கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொள்வோம்.
பாஜகவோடு கூட்டணியி இருக்கும்போது தான் உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இப்போது கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டீர்கள். அதுவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என்று சொல்கிறீர்கள். எனவே தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்காக, மாணவர்களுக்காக அதிமுக இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். அதிமுகவிற்கு மட்டுமல்ல அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுக்கிறேன். இனியும் நீட் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.