தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ஆய்வு செய்தார். மையிட்டான்பட்டி, வேப்பங்குளம், கல்லணை உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்டம் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டம். இந்தத் திட்டத்தின் நோக்கம் கிராமப்புற மக்களின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. பெண்களின் நோக்கம் கையில் பணம் இருக்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் இந்த வேலைக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.50 என நிர்ணயம் செய்து படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் ரூ.250 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 360 நாட்களில் 100 நாட்களில் தான் இந்த வேலை. விவசாயம் இல்லாத காலங்களில் இந்த பணியை செய்ய வைக்க வேண்டும். தற்போது இந்த திட்டத்தை முடக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே மாதம் வரை சம்பள பணம் வந்தது. அதன் பின் வரவில்லை. இதற்கான நிதியை காரணம் காட்டி மத்திய அரசு பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.1500 கோடியும், மதுரைக்கு ரூ.89 கோடியும், கள்ளிக்குடி பகுதிக்கு ரூ.6 கோடி பாக்கியாக உள்ளது. இந்த பணம் விரைவில் வருவதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.