சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள், 5,000 கி.மீ பாயும் ஏவுகணைகள்: பென்டகன்

சீனா தம் வசம் ஆக்டிவ் மோடில் 500 அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் 5,000 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளதாகவும் அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகன் ஆண்டுதோறும் வெளியிடும் அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையை பென்டகன் வெளியிட்டுள்ளது. பென்டகன் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1. 500 அணு ஆயுதங்களை ஆக்டிவ் மோடில் சீனா வைத்துள்ளது.

2. 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா வசம் இருக்கப் போகும் அணு குண்டுகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கும்.

3. 2022-ல் புதியதாக 3 ஏவுகணை தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது.

4. இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

5. சீனாவின் ஏவுகணை இலக்கு 5,500 கி.மீ. தொலைவு. இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாகவே அமையும்.

6. மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்க சீனா மும்முரம் காட்டுகிறது.

7. சீனா கடற்படையில் 370 க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

8. சீனா வசம் இதுவரை இருந்த போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கை 340.

9. 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 395 ஆகவும் 2030-க்குள் 435 ஆகவும் அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

10. தைவானை ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன. இவ்வாறு பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய எல்லைகளில் லடாக் பான்காங், பூட்டானின் டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கி இருக்கிறது; புதிய ராணுவ குடியிருப்புகள், புதிய போர் விமான தளங்கள், புதிய ராணுவ ஹெலிபேடுகள் என அதிநவீன வசதிகளுடன் ராணுவ விரிவாக்க நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடனான மோதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது லோக்சபாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன் படி பாகிஸ்தான் சீனாவுக்கு கொடுத்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லை பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுகிறது என கூறியிருந்தார்.

கல்வான் அல்லது கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தை அக்டோபர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாடுகளுமே எல்லைகளில் பாதுகாப்பு படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படியே நமது ராணுவம் எல்லைகளில் கணிசமான பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ளவும் செய்தது.

ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தைவானை ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன. இவை மட்டுமல்லாமல் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரி பகுதிகளிலும் பூட்டான் டோக்லாம் பீடபூமி பகுதியிலும் சீனா தமது ராணுவ நடவடிக்கையை அதி தீவிரப்படுத்தியுள்ளதாம். புதியதாக போர் விமான தளங்கள், ரானுவ ஹெலிகாப்டர் தளங்கள், ராணுவ குடியிருப்புகளை சீனா கட்டமைத்துள்ளது என்கிறது பென்டகன் அறிக்கை. இந்த இரு பகுதிகளிலுமே இந்தியா-சீனா இடையே ராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியவை. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.