காசாவில் ‘உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம்’ வேண்டும் என ஐ.நா உரிமைகள் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் ‘உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம்’ வேண்டும் என ஐ.நா உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முதல் படி உடனடி மனிதாபிமான போர் நிறுத்தமாக இருக்க வேண்டும், உடனடி மற்றும் பயனுள்ள மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். உலக தலைவர்கள் ஒன்று சேர்ந்து, அடிப்படை மனித நேயத்திற்குத் தேவையான துணிச்சலான மற்றும் மனிதாபிமானத் தேர்வுகளை எடுக்காத வரை இந்த வன்முறை ஒருபோதும் முடிவடையாது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவி தேவைப்பட்ட போதிலும், சர்வதேச சமூகம் சண்டையை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி பிளவுபட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள், மற்றும் 200 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகங்களை நிறுத்தியுள்ளது. மேலும் காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் குண்டுவீச்சு நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும்.. இந்தப் பகைமைகளின் விளைவாக, பல பொதுமக்கள் உயிர்கள், அவர்களில் குழந்தைகள் என ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் காசாவில் உள்ள 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடமிருந்து தப்பிய யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனத்திற்கு வந்தனர். ஆனால் உலகம் முழுக்க உள்ள யூதர்களின் ஆதரவுக்காக, பிரிட்டன், பாலஸ்தீனத்தை உடைத்து யூதர்களுக்காக இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கியது. இதுதான் பாலஸ்தீன பிரச்னையின் தொடக்கப்புள்ளி. அதுவரை தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டனர். பாலஸ்தீனம் எனும் பெரிய நிலம், காசா எனும் துண்டு நிலமாக சுருக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து 1980களில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உருவாகின. அதில் ஹமாஸும் ஒன்று.
இந்த குழுக்களை காரணம் காட்டி காசா மீது இஸ்ரேலும், பல மேற்கு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் பயங்கரவாத செயல்களில் இறங்கியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 17 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. அதற்கு முன்னதாக 18வது நாளான இன்றும் காசா மீது இஸ்ரேல் கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. தற்போதுவரை பாலஸ்தீனத்தில் 1,873 குழந்தைகள் உட்பட 4,651 பேர் உயிரிழந்துள்ளனர். 14,245 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தவிர காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற சூழல் உருவாக்கியுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்திருக்கிறது.
மேலும், “மருத்துவ உதவிகள் கிடைக்காமலும், உரிய மருந்துகள் மற்றும் உணவுகள் கிடைக்காமலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் 50 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை” என்றும் விமர்சித்துள்ளது.