விரைவு சாலை திட்டத்தில் ரூ 1000 கோடி ஊழல்? அண்ணாமலைக்கு தொடர்பு?: வீரலட்சுமி

சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ய பாஜக மாநில தலைவர் திட்டமிட்டுள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்ஜி பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர். இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மாநில பாஜக தலைவர் அண்ணாமலைதான். இது தொடர்பாக அவர்களுடைய சொத்து பத்திர விவரங்களை சேகரித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித் துறையிடம் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டது. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் 26ஆம் தேதி 3ஆவது முறையாக புகார் அளிக்கவுள்ளோம். இதில் அண்ணாமலையின் பெயரை நாங்கள் ஏன் சேர்க்கிறோம் என்றால் சென்னை- பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் இணைந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதை முறியடிக்கத்தான் நாங்கள் ஆவணங்களை திரட்டி 26 ஆம் தேதி புகார் கொடுக்கிறோம்.

மாலினி ஜெயசந்திரன், எம்.ஜி பாஸ்கர், அண்ணாமலை ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம் என்பதை நாட்டு மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.