அதிகரிக்கும் டெங்கு; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டுகளையும், படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

எல் நினோ எனப்படும் கடல் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் காரணமாக டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால், தமிழகத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை கொசுக்களால் தீவிரமாக பரவ வாய்ப்புள்ள நோய்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக வீடுகள்தோறும் மருத்துவக் கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்துத்த வேண்டும்.

எந்த மாதிரியான சூழ்நிலையையும் எதிர்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் போதிய அலகு ரத்தத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் தர வேண்டும். அந்த விவரங்களை பொது சுகாதாரத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.