திராவிடம்னா மொழியும் இல்லை, இனமும் இல்லை: சீமான்!

திராவிடம் என்ன என்பது குறித்து அதை பற்றி பேசுகிறவர்களே குழப்பம் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் விடுதலைப் போராட்ட மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார். மேலும் தமிழகத்தில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள். திராவிடம் ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல். உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார்.

இதற்கு திமுக பொருளாளர் டிஆர் பாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். டி.ஆர். பாலு எம்பி வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும். இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது. அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வெளியிட்ட அறிக்கையில், திராவிட என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிடர் பற்றி மனுதர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43, 44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும், “திராவிடச் சத்திரியர்கள், புனிதச் சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும், அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனுநூல் குறிப்பிடுகிறது என பட்டியலிட்டிருந்தார்.

இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவே விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விழுப்புரத்தில் சீமான் நேற்று பேசியதாவது:-

உனக்கு திராவிடம்னா என்னன்னு பேசத் தெரியலை. திராவிடம்னா என்ன? தெரியாது.. வாட் இஸ் தி மீனிங் பை திராவிடம்? தெரியாது.. ஒரு நேரம் திராவிடம் என்றால் அது ஒரு இடத்தைக் குறிக்கிறது. கொஞ்ச நாள் கழிச்சு வருவானுங்க.. ரொம்ப குழப்பறானே சீமான் அப்படின்னுட்டு திராவிடம் என்றால் அது ஒரு இனத்தைக் குறிக்கிறது. அப்படி எல்லாம் ஒரு இனம் இல்லையே.. திராவிடம் என்றால் ஒரு மொழியைக் குறிக்கிறது.. அப்படி ஒரு மொழியே இல்லை.. திராவிட மொழியே இல்லையே.. கடைசியாக எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிடம்.. வடிவேலு சொல்வதைப் போல பாரதியாரா? பாரதிராஜாவா? வேணாம் விட்டுறலாம்.. அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு அதுபோல அவனுகளே கன்பியூஸ் ஆகிட்டானுங்க.. இவ்வாறு சீமான் பேசினார்.