விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் காலமான நிலையில், “அவரில்லாத நிலையில் யாரால் என்னை மீட்கமுடியும்?” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கட்சியின் முதன்மை செயலாளர் மதிப்புமிகு தோழர் உஞ்சை அரசன் (67) அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்கவில்லை. என்னோடு இன்னும் ஓரிரு பத்தாண்டுகள் பயணிப்பார் என்னும் பெரு நம்பிக்கையுடன் இருந்தேன். இப்படி திடுமென இவரை இழப்பேன் என துளியும் நான் கருதவில்லை. இது எனது நெஞ்சில் இறங்கிய பேரிடி. எனக்கு களத்திலும் கருத்தியல் தளத்திலும் கட்சி நிர்வாகத்திலும் உற்ற பெருந்துணையாக இருந்தவர். கடந்த இரு பத்தாண்டுகளாக முழுநேரப் பணியாளராக என்னோடு இணைந்து பணியாற்றியவர். அவரது மறைவு கட்சிக்கும் விளிம்புநிலை சமூகத்துக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் கட்சிப் பணிகளுக்கான களத்தில் எனக்கு ஈடுசெய்ய இயலாத மிகப்பெரும் இழப்பு.
தொடக்க காலத்தில் மார்சிய- லெனினிய இயக்கத்துடன் ஈடுபாடு கொண்டு மக்கள் பணியாற்றிய இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர். பெண்ணியத்தையும் தலித்தியத்தையும் தனது இருவிழிகளாகக் கொண்டு அவர்களுக்கான விடுதலை அரசியலை முன்னெடுத்து முனைப்புடன் செயலாற்றியவர். பள்ளி ஆசிரியராக அவர் பணியாற்றிய காலத்தில் நான் விடுத்த வேண்டுகோளையேற்று உடனடியாக தனது அரசுப் பணியைத் துறந்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டவர். அந்த நாள்முதல் இன்று தனது இறுதிமூச்சு வரையில் இயக்கத்திற்கும் தலைமைக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக – அதில் முதன்மையானவராக இருந்து செயலாற்றியவர். கட்சியை வலுப்படுத்துவதற்கும் கட்சியின் கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கும் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். தலைமை எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதிலே தீவிரம் காட்டியவர்.
கட்சியில் மகளிர் அணியை ஒருங்கிணைத்ததில் அவருடைய பங்கு மகத்தானது. பல மகளிர் மாநாடுகளை அவரே முன்னின்று நடத்தியுள்ளார். மகளிரணியின் சார்பில் எனக்கு ‘நாவலரேறு’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கச் செய்தவர். கட்சிப் பணிகளைத் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு பொறுப்புணர்வுடன் செய்யக்கூடியவர். கட்சியின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தியதில் அவரது பங்கு முதன்மையானது. கவிதைகள் புனைவதிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றல் வாய்ந்தவர். புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனுசங்க என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வகையில் ‘எகிறு’ என்னும் ‘தலித் சிறுகதைகளை’ எழுதி வெளியிட்டவர். கொள்கைப் பகைவர்களுக்கு கருத்தியல் ரீதியாக கவிதை வடிவிலும் பதிலடி கொடுப்பதில் வல்லவர்.
இயக்கத் தோழர்கள் பெரும்பாலும் என்னை அண்ணா என்று விளித்து வந்த காலத்தில், ‘தலைவர் திருமா’ என்று அழைக்கும்படி அனைவரையும் வலியுறுத்தியவர். பெங்களூரில் சிகிச்சையில் இருந்த நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் (அக் 11) அரைநாள் அனுமதியுடன் சென்னை வந்து மருத்துவமனையிலிருந்த அவரைக் கண்டு ‘தோழர்’ என உரத்து அழைத்தேன். மெல்ல தனது இமைகளைத் திறந்தார். மிகப்பெரும் ஆறுதலாயிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்தது. அப்போது சுற்றி நின்ற குடும்பத்தினரையும் இயக்கத் தோழர்களையும் அடையாளம் கண்டார். ஓரிரு வார்த்தைகளைக் கடினப்பட்டு உச்சரித்தார். எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை வலுப்பெற்றது. ஆனால், இன்று நம் அனைவரையும் அதிர்ச்சியில் வீழ்த்திவிட்டு தனது களப்பணிகளை முடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் பம்பரமாய்ச் சுற்றிய அவரது கால்களும்; கட்சியின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக தலைமையகத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்த அவரது கைகளும் இன்று நிலையாக ஓய்ந்துள்ளன. நெஞ்சு கனக்கிறது.
நிர்வாகத்தை நெறிப்படுத்தும் நன்னோக்கில் அவர் முன்னணி் தோழர்களுடன் அவ்வப்போது கடிந்துகொண்டாலும், உடனே அவர்களை அரவணைத்துக் கொள்ளும் குழந்தை உள்ளம் கொண்ட அவர் இப்போது நம்மோடு இல்லை. துயரம் நெஞ்சைத் துளைக்கிறது. நான் நொடிந்து நிலைகுலைந்து சோர்ந்துபோகும் நேரங்களிலெல்லாம் எனக்கு ஆறுதல் கூறி ஊக்கம் அளித்தவர் இன்றில்லையே என்பது மிகப்பெரும் சோர்வை அளிக்கிறது. அவரில்லாத நிலையில் யாரால் என்னை மீட்கமுடியும்? என்னை தாய் என்றும் தந்தை என்றும் பிள்ளை என்றும் பொதுவெளியில் போற்றியவர். என்னைவிட வயதில் மூத்த அவரை நான் சந்தித்த நாள் முதல் இன்றைய நாள் வரையிலும் ‘தோழர்’ என்று அழைப்பத்திலேயே மகிழ்வடைந்தேன். இனி அவரை எப்போது அப்படி அழைக்கப் போகிறேன்? பெருமூச்சே விடையாகிறது. மதிப்புக்குரிய தோழரின் மறைவால் மீளவியலாத பெருந்துயரில் வீழ்ந்துள்ள என்னை அவரைப்போல இனி யாரால் தேற்றிட இயலும்?
தோழர், தோழர் என்று ஓங்கி உரத்து அழைக்க என் மனம் பதைக்கிறது. என்ன தோழர்? என கேட்டு ஓடிவர அவர் இல்லையே என்று எனது உள்ளம் வெறுமையில் வெதும்புகிறது. அந்த வெறுமையின் பெருவலியோடு பெருமதிப்புக்குரிய தோழருக்கு பெருகும் நன்றியுணர்வோடு செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். தோழர் உஞ்சையார் அவர்களே, நீங்கள் பெரிதும் நேசித்த இந்த இயக்கத்தை நீங்கள் விரும்பியபடி ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வலிமைப்படுத்துவோம். அதுவே தங்களுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்!
அவரது உடல் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அங்கே அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அடக்கம் செய்யப்படுகிறது. எனவே, கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.