108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க: அன்புமணி

108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதுகுறித்து சிவகாசியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

நான் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் டெல்லிக்கு சென்றேன். அப்போது என்னை மிகவும் வித்தியாசமாக பார்த்தார்கள். நான் கையில் எடுத்த விஷயம்தான் rural health care. இதை வைத்து இந்த பையன் (அன்புமணி) என்னதான் செய்ய போகிறான் என்றுதான் பார்த்தார்கள். அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ளவே எனக்கு 3 மாதங்கள் ஆனது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரங்களின் போது இரவு முழுக்க நான் தயார் செய்வேன், காலையில் 5 மணிக்குத்தான் நான் தூங்கவே செல்வேன். பிளஸ் 2 தேர்வுக்கு கூட நான் இப்படி தயார் செய்ததில்லை. அந்த தேர்வுக்கெல்லாம் 12 , 1 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்.

இன்று 108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்த திட்டம் தொடங்கி வைத்து பிறகு 2 ஆண்டுகள் கடுமையான வேலை. சென்னைக்கும் நான் வரமாட்டேன். எனக்கு அரசியல் செய்யணும், 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்ததை விளம்பரப்படுத்த வேண்டும் என எனக்கு தெரியவில்லை. 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்த போது ஒரு அதிகாரியாகத்தான் நான் வேலை செய்தேன். அரசியல்வாதியாக நான் செய்யவில்லை. உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவுக்கு இடம் உண்டு. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நகரம் சென்னை. இந்த விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் என்னை பொருத்தமட்டில் முக்கிய காரணம் டாஸ்மாக். இது அரசின் தொழிலாக மாறிவிட்டது. மதுவே இருக்கக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் மது இல்லாமல் இருக்க முடியாது எனும் நிலைக்கு இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இவ்வாறு அன்புமணி கூறினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆய்வு நடத்த போவதில்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தின ஊதியம் 500 ரூபாய் கொடுக்க வேண்டும். பட்டாசு விபத்துகளை தடுக்க ஊழல் செய்யாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என கூறுவது தவறு. உச்சநீதிமன்றம் 2012 இல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுயாட்சி கூறும் திமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது. இனி சமூகநீதி பற்றி திமுக பேசவே கூடாது. நீட் குறித்து ஆட்சித்து வந்த ஒரு வாரத்தில் ரத்து செய்வோம் என கூறினார்கள். தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கையெழுத்து இயக்கம் திமுக நடத்துகிறது. நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம். ஆளுநர் என்பவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசை வேண்டுமென்றே எதிர்த்து செயல்படக் கூடாது. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.