கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விருதுநகரில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம். பல விடுதலைப் போராட்ட வீரர்களையும், விளையாட்டு வீரர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கிய மாவட்டம். இங்கு வருவதை பெருமையாகக் கருதுகிறேன். அமைச்சரான பின் முதல் முறையாக இங்கு வந்து உங்கள் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தில் மருது சகோதரர்களைப் போலவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவும் அமைச்சர்கள் இருவரும் பணியாற்றி வருகின்றனர். கட்சியில் 22 அணிகள் இருந்தாலும் அதில் முதன்மையானது இளைஞரணி. உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு உதராணமாகத் திகழ்கிறது.
நீட் விலக்கு எங்கள் இலக்கு. இது தனிப்பட்ட திமுக பிரச்சினை இல்லை. மக்களின், மாணவர்களின், தமிழகத்தின் பிரச்சினை. நீட் தேர்வுக்காக 22 குழந்தைகளை இழந்துள்ளோம். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. 2 மாதம் முன் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டது. யார் நடத்தினார்கள், எதற்காக நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறினோம். அதற்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பல தரப்பு மக்களையும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களையும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து என்பதை ஒரு கோடி கையெழுத்தாக உயர்த்தி, இளைஞரணி மாநாட்டின் போது முதல்வரிடம் ஒப்படைப் போம். அதை குடியரசுத் தலைவரிடம் அவர் ஒப்படைப்பார்.
பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாகத் தான் செயல்படுகிறது. ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார் மோடி. இதுவரை செலுத்தவில்லை. ஆனால், தமிழக அரசு உரிமைத் தொகை வழங்குவதை தொடங்கிவிட்டது. பாஜக அரசு உயிரிழந்த 56 ஆயிரம் பேருக்கு ஆயுஷ் பாரத் திட்டத்தில் காப்பீடு செய்து பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு உதயநிதி பேசினார்.