ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்றம், மாநில சட்ட சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் ஒரே நேர தேர்தலுக்காக மத்திய சட்ட கமிஷன் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்துகளை அடுத்த 3 மாதங்களுக்குள் வழங்குமாறும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இரு தரப்புக்கும் வசதியான ஒரு தேதியில் இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கட்சிகளின் பரிந்துரையும் கேட்கப்பட்டு உள்ளது.
இதைப்போல மத்திய அரசின் இந்த திட்டத்தை சாத்தியப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சட்ட கமிஷனுக்கும் இந்த உயர்மட்டக்குழுவினர் கடிதம் அனுப்பி இருந்தனர். அதன்படி சட்ட கமிஷன் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அஸ்வதி மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவினரை சந்தித்தனர். அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். குறிப்பாக இதன் சாதக-பாதக அம்சங்களை அவர்கள் ஆராய்ந்தனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான செயல் திட்டத்தை வகுக்கும் பணிகளை சட்ட கமிஷன் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக, நாடாளுமன்றம், சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுவான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான வழிமுறையை இந்த கமிஷன் வகுத்து வருகிறது.
2029-ம் ஆண்டு முதல் இந்த தேர்தல்களை ஒன்றாக நடத்துவதை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டசபை தேர்தல்களை ஒருங்கிணைப்பதற்காக, சட்டப் பேரவைகளின் பதவிக்காலத்தை குறைக்க அல்லது அதிகரிக்க இந்த கமிஷன் பரிந்துரைக்கும் என தெரிகிறது.
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக நடத்தலாம் என்று சட்ட கமிஷன் கருதுவதாகவும், பிரமாண்டமான இந்த ஜனநாயக நடைமுறையை சுமுகமாக நடத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.