எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைக்கிறது: ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், பொதுச் செயலாளர்கள் எம்.ஜி.ராகுல், பொருளாளர் எம்.சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் கூறும்போது, `உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையில் `டிஎப்’ என்று குறிப்பிட வேண்டும் என மருத்துவர்களுக்குத் தக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அரசு அமைக்கும் அனைத்து குழுக்களில் எங்களது சார்பில் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். 3, 4 சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். எங்களுக்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமாகா தலைவர்ஜி.கே.வாசன், உயரம் குறைந்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து காலக்கெடுவுக்குள் அரசு நிறைவேற்றித் தர வேண்டும். அரசுப் பணிகளில் ஒதுக்கீடு வழங்கி பொருத்தமான பணிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வேலை வழங்குவதை அரசுஉறுதிப்படுத்த வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களிலும் மனிதாபிமான அடிப்படையில் இவர்களை பணிக்கு அமர்த்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துச் செல்வேன்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி தடுக்க நினைக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் கோபமாக இருப்பதே ஆளுங்கட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் காரணம். அண்மையில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். திருவண்ணாமலையில் அதிமுக கொடியையும் அரசு வலுக்கட்டாயமாக எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வளர்ச்சியை அடக்க நினைப்பதும் ஒடுக்க நினைப்பதும் ஒருபோதும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.