உங்க மகனின் முட்டாள்தனங்களை முன்னெடுக்க பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடை அல்ல: அண்ணாமலை

அரசுப் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கையெழுத்து பெறப்படுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாக நீட் தேர்வை திமுக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டால் அதனை தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாத நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் ஐம்பது நாட்களில், ஐம்பது லட்சம் கையெழுத்து பெறுவதற்கான ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவங்கியிருக்கிறது திமுக. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஐம்பது நாட்களில் ஐம்பது லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. இது லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் நாடகம் என்று அதிமுக, பாஜக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பிரசாரம் செய்வதாக வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று மாணவர்கள் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்களிடம் கையெழுத்து பெறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்து திமுக அரசியல் செய்வதாகவும், நீட் குறித்து பொய்யான தகவல்களை பள்ளிக் கூடத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இது பள்ளிக்கூடமா அல்லது அரசியல் மேடையா என பாஜகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

திமுகவின் நீட் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நியாயப்படுத்த வேண்டும் என்ற விரக்தி அவர்களை இப்போது அரசுப் பள்ளிகளில் கொண்டு சேர்த்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மகனின் முட்டாள்தனமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பள்ளிகள் அவரது அரசியல் மேடை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா அழைக்கப்படாமல் வகுப்பறைக்குள் நுழைந்து, நாளை மருத்துவராக வளரக்கூடிய மாணவர்களின் முன்னிலையில் நீட் தற்கொலைக்கு வழிவகுத்தது என விஷம பிரச்சாரம் செய்கிறார். ஏன் திமுக அரசு சிறு குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைக்கிறது? நன்கொடைக்கு ஈடாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதிப் பட்டியலை விற்பதற்கு திமுகவுக்கு நீட் தடையாக உள்ளது. இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், திமுக எம்.பி நடத்தும் மருத்துவக் கல்லூரியில் 400 கோடி ரூபாய்க்கு போலி ரசீது தயாரித்து வருமான வரித் துறையினரால் பிடிபட்டார். திமுக இந்த கேவலமான அரசியலை நிறுத்திவிட்டு, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, தகுதிக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களிடம் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.