சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ‘மணிமேகலை’ புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எவ வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், திமுக எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு பரிசுகள் வழங்கி வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ‘மணிமேகலை’ புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை, தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பிக்கப்படக் கூடிய பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை காலை முக்கிய பிரமுகர்கள் சந்தித்துப் பேசுகின்றனர். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். பிற்பகல் 12.05 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததால், இன்று குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் தங்க இருப்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.