பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், அப்போது மதுபோதையில் இருந்துள்ளார் என காவல்துறை தரப்பில் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், “ஆளுநர் மாளிகை மீது இன்று(நேற்று) பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.45 மணியளவில் ஆளுநர் மாளிகையை நோக்கி தாக்குதல் நடந்துள்ளதாகவும், தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போதிய பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் பலத்த சத்தத்துடன் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவுவாயிலில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. ராஜ்பவன் பாதுகாப்பு காவலர்கள் பெட்ரொல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க முயன்ற போது மற்றொரு குண்டு வீசப்பட்டது. இதில் ஆளுநர் மாளிகையின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். பொதுக்கூட்டங்களில் ஆளுநரை மிரட்டும் வகையில் திமுக கூட்டணி கட்சியினர் பேசி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதின மடத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அச்சுறுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளுநர் மீதான அச்சுறுத்தல்களில் அலட்சியம் காட்டப்பட்டதாலேயே வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆளுநருக்கு வாய்மொழி மிரட்டல்களாகவும், நேரடி தாக்குதல்களாகவும், அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது. இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை சார்பில் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.