“இந்தியாவும், இந்தியர்களும் உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:-
கடல் உடனான மனித உறவு மிகவும் ஆழமானது. தென்னிந்தியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். தெற்காசியாவில் சோழர்கள் சிறந்த வர்த்தக மற்றும் கலாச்சார முறையைக் கொண்டிருந்தனர். தமிழகம் தெற்கு ஆசியா உடனான வணிகம் மற்றும் கலாச்சார இணைப்பில் பங்காற்றி உள்ளது. சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் கடல் சார்ந்த வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7500 கிலோமீட்டர் கடற்கரை, 14,500 கிலோமீட்டர் நீர் இணைப்புகள் உள்ள சாத்தியமான வழிகளையும் கொண்டுள்து. உலக அளவில் 50 சிறந்த துறைமுகங்களின் பட்டியல்களில் இந்திய துறைமுகங்கள் இருக்க வேண்டும். சாகர் மாலா திட்டம் கடல்சார் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய துறைமுகங்களும், அந்த துறைமுகங்களைச் சார்ந்த வளர்ச்சியும் அதிகரிக்கும். இந்தியாவும், இந்தியர்களும் உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்தியா சமுத்ராயன் திட்டத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 6000 மீட்டர் ஆழ்கடல் பகுதியில் வளங்களை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். பருவநிலை மாற்றம் ஒரு சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. சமூகத்தின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வது மாணவர்களின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சாந்தனு தாக்கூர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.