பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது: எல்.முருகன்

“ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று கன்னியாகுமரி வந்தார். அப்போது செய்தியாளர்ளிடம் கூறியதாவது:-

சென்னை ஆளுநர் மாளிகை மீதான தாக்குதல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும். திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்தத் தாக்குதல் சம்பவம் காட்டுகிறது. திமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடத்திய நபரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் திமுக பிரமுகர் என்பதை மறைத்து சட்டத் துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் விஷயத்தை திசை திருப்புகிறார். இது ஒரு தனிநபர் செய்யக் கூடிய காரியம் அல்ல. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை விசாரணை செய்ய வேண்டும். இதனை என்ஐஏ அல்லது சிபிஐ போன்ற அமைப்புகளால்தான் விசாரணை செய்ய முடியும். நேற்றும் கோவையில் பாலஸ்தீனிய கொடியை பறக்க விட்டுள்ளனர். இவையெல்லாம் எவ்வளவு பெரிய தேசத் துரோக செயல்கள். இவற்றையெல்லாம் தமிழக காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.