சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்: பெ. மணியரசன்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி குண்டங்களில் 1 குண்டம் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது தமிழ் முறைப்படி குடமுழுக்கு சடங்குகள் நடைபெற்றதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சேலம் மாநகரத்தின் காவல் தெய்வமாக மக்களால் போற்றி வணங்கப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலுக்கு 2023 அக்டோபர் 27 அன்று திருக்குடமுழுக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்தது. அத்திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், சேலம் – மேச்சேரி தமிழின குருபீடம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கோரிக்கை வைத்தார்.
கடந்த 25.08.2023 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர் திருமதி. செயப்பிரியா அவர்களிடமும், அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடமும் இதற்கான கோரிக்கை மனுக்களை சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் நேரில் சென்று அளித்தார். அதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழின ஆச்சாரியார் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி, தமிழ்க் குடமுழுக்குக் கூட்டியக்கம், தமிழ்க் கலாச்சாரப் படிப்பு வட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில், 09.10.2023 அன்று, இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டுமென அரூர் தொகுதி – பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் அருள் அவர்களிடம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் நேரில் சென்று கோரிக்கை வைத்தார். மறுநாள் அக்டோபர் 10 அன்று, இதுகுறித்து அவர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், தமிழில் நடத்த நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். பழனி குடமுழுக்கிற்கும் இதுபோல் தமிழ்நாடு அரசு தமிழில் நடத்த வாக்குறுதி அளித்த நிலையில், அது மீறப்பட்டு வேள்விச்சாலை தொடங்கி கலசம் வரை சமற்கிருத – பிராமண ஏகபோகமே அனுமதிக்கப்பட்டு, தமிழ் மந்திரங்கள் புறக்கணிக்கப்பட்டன. எனவே, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இணையாக, தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமெனக் கோரி, கடந்த 13.10.2023 அன்று காலை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், திருவில்லிப்புத்தூர் – தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் ஐயா சிவ. வடிவேலன், பேராசிரியர் சௌ. காமராசு, சாமானிய மக்கள் நீதிக் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. பா. பாலமுருகன், மக்கள் உரிமைகள் கழகம் அமைப்புச் செயலாளர் திரு. பார்த்திபன், மக்கள் உரிமைகள் கழக இளைஞரணி செயலாளர் திரு. சேலம் த. கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 25.10.2023 அன்று பகலில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலின் நிர்வாக அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு, செயல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் நேரில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதி தாங்கள் தரும் புனித நீரையும் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டுமெனக் கோரினார். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து, நேற்று காலை, ஐயா சித்தர் மூங்கிலடியார் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம், சிம்மம் சத்தியபாமா அம்மையார் (சத்தியபாமா அறக்கட்டளை அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம், மேச்சேரி) ஆகியோர் சித்தரடியார்கள், சன்னிதானங்கள் புடைசூழ, கோட்டை மாரியம்மன் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டி, தமிழ் மந்திரங்கள் ஓதி உருவாக்கப்பட்ட புனித நீரை, ஊர்வலமாக எடுத்துச் சென்று கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும் வேள்விச் சாலையில் வைக்கும் புத்துயிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி குண்டங்களில் 1 குண்டம் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு பூசகர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழ்வழிச் சடங்குகளை மேற்கொண்டனர். திருக்கோயில் திருக்குடமுழுக்கில் தமிழ் மந்திரங்களே ஒலிக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கையில், இது ஒருபடி முன்னேற்றமே என வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசு, இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் திருக்கோயில் குடமுழுக்குகளிலும் வேள்விச் சாலை – கலசம் – கருவறை ஆகிய மூன்று நிலைகளிலும், சமற்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு இடமளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.