“திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது, தமிழும் இருக்காது” என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திமுக மாணவர் அணி சார்பில் 9 மாவட்ட திமுக மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் வசதிகள் அன்றைக்கு இல்லை. அன்றைய மாணவர்கள் கொள்கைகளில் உரம் பெற்ற மாணவர்களாகவே இருந்தனர். திமுக இயக்கம் என்பது மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஒரு பல்கலைகழகத்தில் அண்ணாதுரை பேசிய பேச்சு மாணவர்கள் உலகத்தையே புரட்டிப் போட்டது. அதற்குப் பிறகுதான் அண்ணாதுரை உந்து சக்தியாக மாறினார். அவரைத் தொடர்ந்து அப்போது இளைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அண்ணாதுரையை சுற்றி யார் யார் இருந்தார்களோ அவர்களையே இயக்கத்துக்கு உருவாக்கி திமுக கட்சியை ஆரம்பித்தார்கள். ஆகவே, மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் திமுக இயக்கம். அப்போது யாரும் பெரிய பதவிகளில் இல்லை.மாணவர்கள் தங்களை வலிமை மிக்கவர்களாக மாறிக்கொண்டார்கள்.
திமுகவில் நிறைய பேர் இணைவார்கள். ஆனால், அவர்களில் பலர் சிதறிப் போவார்கள். கொஞ்சம் பேர் மட்டும்தான் நிலைத்திருப்பார்கள். அப்படி நிலைப்பதற்கு காரணம் அவர்களுக்கு முதலில் திமுகவின் கொள்கை குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும். கட்சியில் சேர்வது பெரியதல்ல, சேர்ந்த பிறகு திமுகவை பற்றியும், அதன் லட்சியத்தை பற்றயும், வரலாற்றை பற்றியும், தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி யார் யாரெல்லாம் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு கொள்கையிலேயே பிடிப்பு ஏற்படும். அவர்கள்தான் தாக்குப் பிடிப்பார்கள். யார் யாரெல்லாம் இதெல்லாம் கேட்டும் கேட்காமல் போகிறார்களோ அவர்கள் எல்லாம் இடையிலேயே விழுந்து விடுவார்கள். எது எப்படி இருந்தாலும் இயக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு வரலாறு தெரியாவிட்டால் நாம் வாழ்க்கை நடத்த முடியாது. வரலாற்றை மறந்த இனம் நினைவிழந்த மனிதனுக்கு சமம். நாம் நம்முடைய இனம் கெட்டுப் போனதற்கு காரணம் வரலாற்றை மறந்தது தான். நாங்கள் இலையுதிர் காலத்தில் இருக்கிறோம். நீங்கள் துளிர்கின்ற காலத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். தற்போது அரசியலில் மோடியைப் பற்றி பேசினாலும், இறந்து போன லேடி பற்றி பேசினாலும் அல்லது யாரைப் பற்றி பேசினாலும் முதலில் அவர்களை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
முதலில் கொள்கையை தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு அந்தக் கொள்கைக்கு ஆதாரங்களை தேடி படியுங்கள். அதன் பிறகு மற்றவர்களோடு விவாதித்து அவர்களை தன் பக்கத்திலேயே ஈர்ப்பதற்கான முயற்சி செய்யுங்கள். அதுதான் கட்சிக்கு சேர்க்கும் பணிகள். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை எழுதிய நுால்கள், பழம்பெரும் நுால்கள்,வரலாற்று, அரசியல் நுால்கள் இவையெல்லாம் படிக்க பழகுங்கள். திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது. தமிழ் இருக்காது. திமுக என ஒன்று இல்லை என்றால் இந்த நேரம் இந்தியை இங்கு உட்கார வைத்து எல்லாத்தையும் முடித்து இந்தியா என்ற பெயரையே மாற்றி இருப்பார்கள்.
பெரியார் போன்ற திராவிடத் தலைவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும். பெரியார், அண்ணா, பொதுக் கூட்டங்களின் பேச்சு, மொபைல் போன்கள் மூலம் டிஜிட்டல் மயமாக இருந்தாலும், மாணவர்கள் தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்களில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். இது போன்ற வாசிப்பு திறன் அவர்களின் வாழ்க்கையில் எந்த சவால்களையும் எதிர்கொள்ள உதவும். மேலும், இது போன்ற வாசிப்பு, அன்றாட வாழ்வில் மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மாணவர்களின் கருத்துக்களை வடிவமைக்க உதவும். விவாதங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் உதவுகிறது. இளம் பேச்சாளர்கள் தங்களை வெளிப்படுத்தவும், அவர்களை நல்ல பேச்சாளர்களாக உருவாக்கவும் பயிலரங்குகள் ஒரு களமாக அமைகின்றன.
சுயமரியாதை இயக்கம், இந்தித் திணிப்புக்கு எதிரான இயக்கம். திராவிட வரலாறு போன்ற பல்வேறு விஷயங்களைப் புரிந்துகொள்ள திமுக உதவியதால், திமுக உருவான ஆரம்ப ஆண்டுகளில், தனது இளம் தொண்டர்களுக்காக இது போன்ற பல பயிலரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சியில் உள்ள இளம் தொண்டர்களுக்கு இது போன்ற பயிலரங்குகளை ஏற்பாடு செய்ய வலியுறுத்தி வருகிறேன். இது போன்ற பயிலரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.