சென்னை அம்பத்தூரில் ஆயுதபூஜையன்று வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட சென்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்து உள்ள பட்டரவாக்கம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 23ம் தேதி அதாவது ஆயுதபூஜை தினத்தன்று இவர்கள் கூட்டமாக தொழிற்சாலை வாசலில் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சண்டையை விலக்கிவிட தொழிற்சாலை மேனேஜர் முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து வேறு வழியின்றி காவல்துறைக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி, ராஜ்குமார் உள்ளிட்டோர் வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டிருந்த சண்டையை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் குடிபோதையில் இருந்ததால், தடுக்க வந்த போலீசாரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து கூடுதல் போலீசாரை வரவழைத்துள்ளனர். ஆனால் அதற்குள் காவலர் ரகுபதி சரமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார். அவரை மீட்ட சக காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் குவிந்த கூடுதல் போலீசார் சண்டையில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களை விரட்டியுள்ளனர். அதேபோல காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
மறுபுறம் போலீசாரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டி தாக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த வீடியோவை கொண்டு நேற்றிரவு முதல் விடிவிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் சுமார் 28 வடமாநில இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை செங்குன்றம் காவல்துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சண்டையை தடுக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா? என இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருவேளை ஈடுபட்டிருந்தால் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.