தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாஜக மேலிட குழு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு இன்று சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளது. மேலும் பனையூரில் உள்ள அண்ணாமலையின் வீட்டுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அண்மையில் பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, லோக்சபா எம்.பிக்கள் சத்ய பால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவை வரவேற்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கில் வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவ பாஜகவினரை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம் என தெரிவித்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், பாஜக மேலிடத்தால் அமைக்கப்பட்ட நால்வர் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். பாஜக நிர்வாகிகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, வழக்குப்பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோரை சந்தித்துப் பேசினர். மேலும் பாதிக்கப்பட்ட பாஜகவினர் வீடுகளுக்கு இன்று நேரில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். கோட்டூர்புரத்தில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கும், அடுத்ததாக திருவான்மியூரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டுக்கும் செல்கின்றனர். பின்னர் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜகவின் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிடுகின்றனர். மேலும், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தின் போது காயமடைந்த பாஜக ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கரன், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் இந்த நால்வர் குழுவினர் செல்கின்றனர். இந்த பயணத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை தமிழக பாஜக சார்பில் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மதியம் 1 மணி அளவில் தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ஆய்வுக் குழுவினர், ஆய்வின் முடிவு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் போன்றவற்றை அறிக்கையாக தயாரித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோருக்கு அளிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து, டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைமையிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்கவுள்ளனர்.
முன்னதாக, நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சதானந்த கவுடா, “தமிழகத்தில் ஆளும் திமுக அரசால், தமிழக பாஜகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்க உள்ளோம். அதே போல, இன்னும் 2,3 நாட்களில் விரிவான அறிக்கை தயார் செய்து அதனை பாஜக தேசிய தலைமைக்கும் அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.