ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் விவாதமாக வெடித்திருக்கும் நிலையில், ஆளுநரின் அவதூறு குண்டுகளால் வெறுப்பாகிப்போனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
விடுதலைப்போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 222வது குரு பூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சீமான் கூறியதாவது:-
ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. யாரோ ஒருவர் எறிந்திருக்கலாம். ஆளுநர் அவரது வேலையை மட்டும் செய்ய வேண்டும். இதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் வீடுகளில் குண்டுகள் வீசப்பட்டதா? தேவையில்லாத வரலாற்றுத் திரிபு செய்திகளை ஆளுநர் சொல்லி வருகிறார். இங்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனும் அறிவுத் தெளிவும், அரசியல் புரிதலும் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இன வரலாற்றை வாசித்து, நேசித்து வருபவர்கள். வாய்க்கு வந்தபடி ஆளுநர் பேசக்கூடாது. ஆளுநரின் தொடர் பேச்சுக்களால், ஏற்பட்ட வெறுப்பில் அந்த நபர் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம்.
கமல்ஹாசன் கட்சியுடன் சேர மாட்டேன். நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தமிழக ஆட்சியாளர்கள் மறைப்பதாக, ஆளுநர் கூறியதை வரவேற்கிறேன். அதேசமயத்தில் அதை சொல்ல தகுதி வேண்டும். இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது சிரிப்புதான் வருகிறது. எதிர்க் கட்சியாக இருக்கும்போது புதிய கல்வி கொள்கையை ஏற்காத திமுகவினர், ஆளும் கட்சியானவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் இல்லம்தோறும் கல்வித் திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.