உலகத்தின் மௌனனம் கலைய இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்?: ஸ்காட்லாந்து அமைச்சர்

இந்த உலகம் தன் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும் என்று ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்ஸா யூசஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ்களை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது. 21 நாட்களாக காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போரில் பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் தற்போது காசா பகுதிகளில் இணைய மற்றும் மொபைல் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்ஸா யூசஃப் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனை தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், காசா மிக மோசமான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் தன் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்? என்று அவர் கேட்டுள்ளார்.

இதேபோல் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் வலியுறுத்தி இருக்கிறார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவின் நிலை மோசமாகி வருகிறது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் மத்திய கிழக்கு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிணைக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உயிர் காக்கும் பொருட்கள் மக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு சேர வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது உண்மைக்கான நேரம் என்றும் காலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.